Video

அன்பே சிவம் - ஒரு பக்கக் கதை

"ரித்தீஷ்... இன்னிக்கு பிரதோஷ நாள். இந்த பாலைக் கொண்டு போய் ஈஸ்வரன் கோயிலில் சுப்ரமணிய அய்யரிடம் கொடு. அவரு நந்திக்கு பாலாபிஷேகம் செய்வார்", என்று அம்மா என்னிடம் பால் தூக்குப் பாத்திரத்தைக் கொடுத்தாள்.


நான் அதை வாங்கிக் கொண்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பஸ் நிலையம். அங்கே பயணிகள் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கையின் கீழே நான்கு நாய்க் குட்டிகள். அதன் தாய் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. குட்டிகள் "க்யோம்..க்யோம்' என்று கத்தியவாறே அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தன. பாவம் பசி போல. எனக்கு பரிதாபமாக இருந்தது.

பால் தூக்கின் மேல் மூடியைத் திறந்தேன். அதை குட்டிகளின் அருகே வைத்தேன். மூடியில் பாலை ஊற்றினேன். முதலில் தயங்கிய குட்டிகள் சற்று தைரியம் வந்து மூடியைச் சுற்றிலும் நின்றுகொண்டு பாலைக் குடிக்க ஆரம்பித்தன.

இதற்குள் குட்டிகளின் தாயும் வந்தது. அது முதலில் என்னை முறைத்துப் பார்த்தது. பின்னர் அதுவும் பாலைக் குடிக்க ஆரம்பித்தது. நான் மிகவும் ஆர்வத்துடன் மொத்தப் பாலையும் நாய்களுக்கு ஊற்றினேன்.

எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்குத் திரும்பினேன். "பாலைக் கொடுத்துட்டியாடா?" என்றாள் அம்மா.

"ஆமாம்மா..." என்று சொல்லிவிட்டு டியூஷன் போவதற்காக பாடப் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.

"சரி... சரி... இந்த நூடுல்ûஸ சாப்பிட்டு டியூஷன் போ" என்றாள் அம்மா.



டியூஷன் முடித்துவிட்டு 8 மணிக்கு வீடு திரும்பினேன். அம்மா கையில் நீண்ட பிரம்பு.

"என்னம்மா..குரங்கு கூட்டம் வந்ததா?" என்றேன்.

ஏனென்றால் எங்கள் திண்டிவனத்தில் குரங்குகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து தொல்லைக் கொடுத்துவிட்டு போகும். அதனால் நீண்ட கழிகளை எப்போதும் வைத்திருப்பார்கள்.

நான் வீட்டுக்குள்ளே நுழைந்து புத்தகப் பையை வைப்பதற்குள்... எதிர்பாராத வகையில் "சுளீர்... சுளீர்..." என்று பிரம்பால் அம்மா என்னை விளாசு விளாசு என விளாசினாள்.

"அஞ்சாவது தான் படிக்கற... 10 வயசு கூட ஆகல்ல. அதுக்குள்ள பொய்யா சொல்றே. நீ பிரதோஷத்துக்கான அபிஷேக பாலைக் கொண்டு போய் கொடுக்கவே இல்லைன்னு சுப்ரமணிய அய்யர் சொன்னாரே... பாலை என்னடா செஞ்சே... வித்துட்டு ஏதாவது வாங்கித் தின்னியா..?"

"இல்லம்மா... பஸ் ஸ்டாண்டில் நாய்க்குட்டிகளுக்கு..."

"என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே... சாமிக்கு வச்சிருந்த பாலை... நாய்க்கு... ஊத்தினியா...? " - மேலும் "சுளீர்... சுளீர்..." என்று விளாசினாள்.

அதற்குள் அப்பா வந்தார். அம்மாவைத் தடுத்தார்.

அம்மா புகார் காண்டம் படித்தாள்.

நான் விசும்பலுடன் உள் அறையில் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருந்தேன். அப்பா சட்டையைக் கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டியவாறே என்னை வாஞ்சையுடன் பார்த்தார்.
"அப்பா நான் செஞ்சது தப்பா...?"

"தப்புதான்.."

"நல்லதுதானேப்பா செஞ்சேன்...!"

"நல்லது தான் செஞ்சே..."

"பின்னே என்னப்பா?"

"பொய் சொன்ன பாரு..அதுதான் தப்பு..." என்றவாறே என்னருகே வந்து காயம்பட்ட என் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

எனக்கு அம்மா அடித்த வலியே தெரியவில்லை.

9 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

நெகிழவைக்கும் கதை

அன்பே சிவம் தான்

really very nice... with a message to the youngsters...

@அகிலா,
@வேலு ,
@சுதர்ஷன்

உங்களின் வருகைக்கு என் நன்றிகள்.

இந்த கதையை எழுதிய ஆசிரியர் யார் என்று எனக்கு தெரியவில்லை. நான் வாங்கிய சாப்பாட்டு பொட்டலத்தில் இடம் பெற்ற கதை இது.

மாலை மலரில் வெளிவந்த கதை இது.

@அன்புடன் அருணா

பூங்கொத்து! -இதை எழுதியவர் ?

Post a Comment