Video

இலவசம் - ஒரு பக்கக் கதை

கோபு அரசாங்க ஊழியன். அது தீபாவளி நேரம் என்பதால் தங்கள் வேலை விசயமாக அவனிடம் வந்தவர்கள் எல்லாம், அவன் கேட்காமலேயே தங்களால் முடிந்ததைக் கொடுத்து, அவன் மனதில் இடம் பிடிக்கப் பார்த்தனர்.

கோபு, லஞ்சம் வாங்குபவனல்ல. "இந்த வேலையை முடிக்க இவ்வளவு தா" என பேரம் பேசும் அடாவடிக்காரனும் இல்லை. அவனிடம் வருகிற வேலைகளை நேர்மையாகவே செய்து கொடுப்பான். ஆனால், யாராவது பிரியமாய் ஏதாவது கொடுத்தால், அதை வேண்டாம் என மறுக்கவும் மனம் வராது. சில சமயங்களில் "வேண்டாம்" என மறுத்துவிட நினைப்பான். ஆனால், பணத்தைக் கண்டதும் ஏனோ அவன் ஊமையாகி விடுவான்.


ஒருநாள் மாலை நேரம். அவன் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மூதாட்டி ஒருவர் பாலிதீன் குப்பைகளைக் கிளறி அட்டை, பேப்பர், இரும்பு, தகரம் எனத் தேடித் கொண்டிருப்பதைக் கண்டான். அவரது வயதான தோற்றமும், கசங்கி நைந்து போயிருந்த ஆடையும், சுருக்கம் விழுந்த தேகமும் கோபுவுக்குள் பரிதாபத்தை உண்டாக்கின.

பாவம், இந்த தள்ளாத வயதில் ஓய்வு எடுக்க வழியில்லாமல் இவரைப் போல் எத்தனையோ பெரியவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என நினைத்து மனம் வருந்தினான்.

இந்த அம்மாளுக்கு ஏதாவது உதவ வேண்டும் எண்ணியவன், "அம்மா இந்தாங்க..." என பத்து ரூபாய்த்தாள் ஒன்றை அவர் முன் நீட்டினான்.

அதைக்கண்ட மூதாட்டி,"எதுக்குப்பா?" என்றார்.

"சும்மா வைச்சுக்கோங்க" என்றான். காசு கொடுத்தால் சந்தோசமாய் வாங்கிக் கொள்வதை விட்டுவிட்டு, இந்த மூதாட்டி கேள்வி கேட்கிறாரே என நினைத்தபடியே ரூபாயை நீட்டிக் கொண்டிருந்தான்.

"இல்லைப்பா... நான் சாகிறவரை யார்கிட்டேயும் கையேந்த மாட்டேன்னு உறுதியா இருக்கேன்" என்றார்.

"இது பிச்சை இல்லம்மா, பிரியமா தர்றேன்" என்றான் வியப்புடன்.

"அப்படீன்னா, எனக்கு உன் பிரியமே போதும் தம்பி. காசு வேண்டாம். யார்கிட்டயும் எதற்காகவும் இனாம் வாங்க மாட்டேன். பிரியமா கொடுத்தாலும், இனாம் இனாம் தானேப்பா..." என உறுதியாய் மறுத்து விட்டு, குப்பைமேட்டை கிளறத் தொடங்கினார் மூதாட்டி.

கோபு அசந்து போனான். அந்த அம்மாள் சொன்ன வார்த்தைகள் சுருக்கென தைத்தன. இவனுக்குப் போதுமான சம்பளம் வந்த போதும், பிறர் பிரியமாய்த் தருவதை வேண்டாம் என மறுக்க மனம் வராமல் வாங்கிக் கொள்கிறான். ஆனால், இந்த மூதாட்டியோ...?!

அடுத்தநாள், தன்னைத்தேடி வந்த இனாம்களை புன்னகையுடன் வாங்க மறுத்து, "இது என் கடமை" என்றான் கோபு. அன்று பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென வந்துவிட, அவன் அதிர்ஷ்டவசமாய்த் தப்பித்தான். "பிரியமாய்க் கொடுத்தாலும் இனாம் இனாம்தானே" என்ற பாட்டியின் வார்த்தைகள் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தன.

- ரமணி

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

4 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

nice lines... everyone should follow...

சுப்பர்ப் கதை...பாட்டி சொன்ன வார்த்தைகள் தப்பித்தான் கோபு...எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும்...

அன்பின் கோழி பையன் - அருமையான சிந்தனை - சில சமயங்களில் இப்படித்தான் நடக்கும். பாட்டியின் அறிவுரை கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Cheena, Thanks for your visit and comment.

Post a Comment